அத்துருகிரிய பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட க்ளப் வசந்தவின் சடலம் தற்போது கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள பிரபல மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
க்ளப் வசந்தவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மலர்சாலைக்கு இரண்டாவது மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அழைப்பில் வசந்தவின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டாம் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் வழங்கிய அறிவுறுத்தல் வசந்தவின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா என அந்த தொலைபேசி அழைப்பில் வினவியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10ம் திகதி குறித்த மலர்சாலைக்கு அச்சுறுத்தல் அழைப்பு விடுக்கப்பட்டு, வசந்தவின் பூதவுடலை அங்கு வைக்க வேண்டாம் என்று கூறப்பட்டது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த அழைப்பு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக மலர்சாலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் க்ளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பிற்பகல் நடைபெறவுள்ளன.