கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய் பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த சாரதி காவல்துறை பாதுகாப்பின் கீழ் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஆராய்ச்சிக்கட்டுவையில் உள்ள அவரது காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று முதல் இன்று பிற்பகல் வரை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதுடன், பல்வேறு அரசியல் தரப்பினர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.