Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என விசேடமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட இலங்கையினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது உட்பட அதன் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதித்துறை சுதந்திரம், நாட்டின் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகள் விடுவிக்கப்படுவது வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பதற்றங்கள், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல்கள் மற்றும் தடுப்புக்காவலின் போது மோசமான முறையில் நடத்தப்படல் போன்ற நிலைமைகள் குறித்து கரிசனைக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share: