மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அமைச்சர் கூறினார்.
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (14) வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.