மியன்மாரில் மனித கடத்தல் மோசடியில் ஈடுபட்டிருந்த சட்டவிரோத இணைய அடிமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு இலங்கையர்கள் மீட்கப்பட்டதை மியன்மார் உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஆறு ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், மியன்மார் அரசாங்கத்தால் நடத்தப்படும் பிராந்தியத்தில் உள்ள மியாமடி பொலிஸ் நிலையத்தில் இலங்கையர்கள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இலங்கை தூதரகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகள் மீட்கப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தூதுவர் மேலும் கூறியுள்ளார்.
மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிவிவகார அமைச்சு, மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள சுமார் 56 இலங்கையர்களை மீட்டு நாடு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.