Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய கீழ் மட்டத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் இந்த தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனுடன் தொடர்புள்ள 26 திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் அரச, தனியார் துறைகள், சிறிய மற்றும் நடுத்தர விவசாய தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கிய கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் எனவும் விவசாய ஏற்றுமதி பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க, ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்தை வர்த்தக மட்டத்திற்கு கொண்டு வருதல், விவசாய உயிர்ப்பல்வகையைப் பாதுகாப்பது தொடர்பில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை ஊக்குவித்தல் என்பவற்றுக்காக அந்தக் காணிகளின் உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் வரம்புகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்படுவதாக காமினி சேனாநாயக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களிலும் முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க, விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Share: