Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

பல நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவுக்கு வழங்க தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதன்போது, ஹரின் பெர்ணான்டோவின் கருத்து சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதா என இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர்ஹரின் பெர்னாண்டோ அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்த போது, இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அவர் தெரிவித்தார்.

இது தெரியாமல் கூறப்பட்ட விடயம் அல்ல. தற்போது இலங்கையில் நடைபெறும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் அமைதி காக்கிறார்கள், ஹரிண் பெர்ணான்டோவின் கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சருக்கு இவ்வாறான கருத்துக்களை மேற்கொள்ள முடியுமா? சிறிலங்கா ரெலிகொம், மின்சார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவுக்கு வழங்க தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதாகவும் சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறாக இலங்கையின் அனைத்து சொத்துக்களும் வழங்கப்பட்டால் எமக்கு மிகுதியாக என்ன இருக்கும்? இந்த நாடாளுமன்றத்தையும் இந்தியாவுக்கு கொடுங்கள்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.

எங்கே அந்த ஒப்பந்தம்? இதனை ஆளுங்கட்சி உறுப்பினர்களாக நீங்கள் பார்த்தீர்களா?அமைச்சரவை அமைச்சர்களுக்கு இந்த ஒப்பந்தம் தொடர்பில் தெரியுமா?இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், இந்திய வர்த்தகர்கள் இலங்கைக்கு சுதந்திரமாக வந்து செல்ல முடியும்” என்றார்.

Share: