சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்லாரோக்கியத்தை உறுதிப்படுத்துவதில் சவால்கள் நிலவுகின்றன. குறிப்பாக பிள்ளைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தல், பிள்ளைகளைப் பல்வேறு துஷ்பிரயோகச் செயல்களில் ஈடுபடுத்தல் போன்ற அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் இலங்கைப் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தற்போது காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சர்வதேச சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்ற வகையில் இணைந்த சட்டமொன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
“எதிர்வரும் 25 ஆண்டுகள்” எனும் பெயரிலான 2023.01.09 திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் “சிறுவர் பாதுகாப்பு சட்டம்” எனும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.