Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார்.

இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில்  பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர  மாநாடு பெப்ரவரி  மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும்  ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல்  ஆரம்பிக்கப்பட்டது.

“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன்  வரைபடம் ஒன்றும்  தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர்  எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன.

2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது.

Share: