எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுவரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் கட்சியுடன் வேறாக கலந்துரையாட வேண்டுமென கோரப்பட்ட போதிலும் ஜனாதிபதி அதற்கான திகதியை இதுவரை பெற்றுத்தரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் நிபந்தனைகளுக்கு இணங்கி செயற்படும் ஒருவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் இதன்போது தெரிவித்துள்ளார்.