பதுளை, புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, கணிதப் பாடத்திற்காக மேலதிக வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டுள்ளார்.
எனினும் அவரது குடும்பத்தின் வறுமை காரணமாக அதற்கு பணம் திரட்டிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஆயிஷாவின் உறவினர்:
“.. டீச்சர் சொல்லியிருக்காங்க, நீங்க நல்லா படிக்கிறீங்க கணிதப் பாடத்திற்கு க்ளாஸ் போங்கன்னு.. க்ளாஸ் அனுப்பவும் காசு வேணுமே.. காசு இல்லாதது தான் பிரச்சினையே.. டீச்சர்கள் இப்படிக் கூறும் போது. அவருக்கு க்ளாஸில் இருக்க முடியல்லையாம், அவள் மனமுடைந்து க்ளாஸில் தனியாக ஒதுக்கப்பட்ட ஆளாக தான் இருந்திருக்கிறாள்.. ”
கடந்த நாட்களில் தனக்கு கணிதப் பாடத்திற்கு மேலதிக வகுப்பிற்கு செல்ல வேண்டும் என ஆயிஷா தனது பெற்றோர்களுக்கு தெரிவித்திருக்கிறாள்.
ஆயிஷாவின் தாய்:
“.. கணிதத்திற்கு க்ளாஸ் போகணும்னு சொன்னா, ஆனால் இப்போ தின்னுறதுக்கே வழியில்ல, க்ளாஸ்க்கு காசு இல்லன்னு சொன்னன்..”
தாயின் இந்த வார்த்தைகளை கேட்ட ஆயிஷாவின் அடுத்த கட்ட நடவடிக்கை தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக மாறியது.. அதற்காக மலசலகூடத்திற்கு சென்று அவரது பாட்டிக்கு கொடுக்கும் சில மருந்துகளை குடித்துள்ளதை அடுத்து அவர் அவசரமாக பதுளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவரது உயிரைக் காப்பாற்ற வைத்தியர்களால் முடியவில்லை.
ஆயிஷாவின் தாய்:
“.. எனக்கு நான்கு பிள்ளைகள்.. நான் மகள் இப்படி க்ளாஸ் போகணும்னு சொல்றா என்று கூற, எனக்கும் வீட்டுக்காரருக்கும் இடையே சிறு வாக்குவாதம் நடந்தது.. அதில் கணவர் என்னை விட்டுச் போறதா சொன்னாரு.. அதற்குப் பின்னர் மகளுக்கு சரியான கவலை.. தந்தை போனா எப்படி நாம சாப்பிட்றது என்ன செய்வதுன்னு.. அப்படியே மகள் பாண் சாப்பிட்டிட்டு எழுந்து டொய்லட் போனவ தான்…”
நீங்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளீர்களா?
அழையுங்கள் – 1926, 1333, 070 7308308