Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அரிசியின்  நிர்ணய  விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நுகர்வுப்  பொருட்களின் தற்போதைய விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர்  விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும்  அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறையொன்று அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்டகாலமாக உத்தரவாத விலைகளை அமுல்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்தும் இக்கலந்துரையாடலில்  கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களை பதிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டட்லி சிறிசேன, நிபுன கம்லத், மித்ரபால லங்கேஸ்வர, ஜயசிறி குணதிலக்க, மேனக  கம்லத் உள்ளிட்ட வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share: