சர்வதேச போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடைய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும், கடத்தல்காரருமான ‘மிதிகம ருவன்’ என்றழைக்கப்படும் ருவன் சாமர, கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (31) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
டுபாயில் கைது செய்யப்பட்ட அவர் இன்று காலை விசேட பாதுகாப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் ஹரக் கட்டாவின் மைத்துனர் என தெரியவந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு டுபாயில் உள்ள க்ளப் ஒன்றில் நடந்த மோதலில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
மிதிகம ருவன் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பட்டியலில் உள்ள குற்றவாளி என்பதுடன், கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் டுபாய் சென்று அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து அவரை பொறுப்பேற்று மீள நாட்டிற்கு அழைத்து வந்தனர்.
இவர்கள் இன்று காலை 05.45 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் மிதிகம ருவனை கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.