Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இந்தியாவில் கைதான ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் சிலாபம் – பங்கதெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு பிரவினரால் தேடப்பட்டு வரும் ஒஸ்மன் ஜெராட் என்பவரின் மனைவியின் இரு சகோததர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்களையும், ஒஸ்மன் ஜெராட் என்பவரே இலங்கையிலிருந்து வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 இலங்கையர்களும் அஹமதாபாத்தின் குஜராத் பிராந்தியத்தில் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மொஹம்மட் நுஸ்ரத் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மற்றும் மின்சார சாதனங்களை கொண்டு வந்து கொழும்பில் விற்பனை செய்தவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, கொழும்பில் தங்கியிருந்த நுஸ்ரத் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஹெரோயின் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 2 உறுப்பினர்களான மொஹம்மட் பாரிஸ் மற்றும் மொஹம்மட் ரஸ்டீன் ஆகியோர் இந்தியாவிற்கு சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மொஹம்மட் பாரிஸ் புறக்கோட்டையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றியுள்ளதுடன் கடந்த வருடம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், 2022 செப்டம்பர் 16 ஆம் திகதி கொழும்பு கரையோர பொலிஸாரால் மொஹம்மட் ரஸ்டின் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களே இவ்வாறு இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share: