ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல என்றும், வறிய மக்களின் பாதுகாப்புக்கான நிவாரணமாகவே சமூர்த்தியை போன்ற மூன்று மடங்கு நிவாரணத் தொகையை வழங்கும் அஸ்வெசும வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செலுத்த வேண்டியிருந்த நிலுவைத் தொகையில் 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடித்திருப்பதாகவும் இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.