கோட்டாவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) சட்டத்தின் 3 (1) வது பிரிவின் அடிப்படையில் இது குற்றமாகும் என்பதால் இது குறித்து தேவையான விசாரணையை முன்னெடுகக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை நேற்று(20) பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்;
இறுதியாக இடம்பெற்ற 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இவ்வருடம் ஒக்டோபரிலும் ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், மீண்டும் இந்நாட்டில் இனவாதம், மதவாதம், இனங்களுக்கிடையிலான விரிசல், சந்தேகங்களை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நலவுகளை பெற்றுக்கொள்வதற்கு பெரும் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது முஸ்லிம் சமூகத்தினரே இந்த பேராட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும் முஸ்லிம்களும் சிறுபான்மை சக்திகளுமே கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் இருந்ததாகவும், முஸ்லிம் சமூகத்தினர் கோட்டாபயவை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் எனவும், சிங்கள பௌத்த சக்திகள் இங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அவருக்கு மிக நெருக்கமான ஒருவரே இலங்கை புலனாய்வுத் துறையின் பணிப்பாளராக தற்போதும் கடமையாற்றி வருகிறார். இந்நாட்டில் புலாய்வுப் பிரிவிற்கும்,
புலனாய்வுப் பிரதானிக்கும் தெரியாத தகவலை இவர் எவ்வாறு வெளியிட முடியும்? மக்கள் முன்னெடுத்த வெகுஜன போராட்டத்தை இது சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்,இது தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்,இது முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அல்லது சிறுபான்மை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமென இந்நாட்டின் புலனாய்வுத் துறையினர் எங்கும் தெரிவித்திருக்காத நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார எவ்வாறு இத்தகைய கருத்துக்களை வெளிப்பட கூற முடியும்?
காலி முகத்திடலை பிரதானமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பெருவாரியாக இந்நாட்டின் பெருன்பான்மை பௌத்த சமூகத்தினரே முன்னெடுத்திருந்தனர். நாளாந்தம் பொதுமக்களாகவும் குடிமக்களாகவும் அநுபவித்து வந்த நெருடிக்களுக்கு ஆட்சி நிர்வாகம் உரிய தீர்வுகளை வழங்க தவறியதன் விளைவாக வெகுண்டெழுந்த வெகுஜன போராட்டத்திற்கு இனவாத முத்திரை பதிக்க முற்படுவது மீண்டும் இன உறவுகளை சீர்குலைக்க எடுக்கும் முயற்சியாகும்.
இது மீண்டும் அடுத்த தேர்தல்களை இலக்காக் கொண்ட இனத்துவ அரசியலை ஒன்று தி்ரட்டிக்கொள்வதற்கான முயற்சி.
சுகீஸ்வர பண்டார தற்போது ஜனாதிபதி செயலகத்திலயே கடமையாற்றி வருகிறார். எனவே இவ்வாறான கருத்துக்களை நோக்கும் போது மீண்டும் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் அரங்கேறுமோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.