அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த ஆண்டு மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்ட எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில், ஏப்ரல் 21 தாக்குதலினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது.
அதன் பின்னர் கொவிட்-19 தொற்றினால், 2022ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாகக் குறைந்தது.
2024ஆம் ஆண்டில் 2 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 2 சதவீத வளர்ச்சியை எட்டினாலும், 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகும்.
எனினும் 2027 அல்லது அதற்கு முன்னதாக அந்த இலக்கை அடைய வேண்டும் என்பது தங்களது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.