Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்திய சாலை முன்பாக வீசி சென்றனர்.

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டுக்கோட்டையில் ஒரு இளைஞனை கைது செய்தனர். அதேவேளை கிளிநொச்சியில் பதுங்கியிருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, கிளிநொச்சியில் கைதான நால்வரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அவர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற, மன்று நால்வரையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது.

அந்நிலையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட நால்வரையும் இன்றைய தினம் மன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share: