நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அப்பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்க இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றின் செயலாளர்களை உள்ளடக்கி, துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த நிபுணர் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்குள் அனைத்து துறைகளிலும் உள்ள கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்கி ஊக்கமளிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் தடைப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது, முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குதல், நிர்மாணச் சேவைகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் பாரிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் நிர்மாணத்துறை பிரதிநிதிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், தெங்குக் கைத்தொழில் தொடர்பான உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள கைத்தொழில்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடலும் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தேசிய பொருளாதாரத்திற்கு தேங்காய் கைத்தொழிலின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட ஒரு போட்டித் தொழிலாக நாட்டில் தென்னைச் செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தேசிய தெங்குக் கைத்தொழில் சபையொன்றை நிறுவுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது தெங்குக் கைத்தொழிலில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அத்துறையில் பணிபுரிபவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நிலத்திலிருந்து அதிகபட்சப் பயனைப்பெற்று தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும், அந்தத் தொழில்துறையை அபிவிருத்தி செய்யவும், திட்டமிட்ட வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கு தெங்குக் கைத்தொழிலுடன் தொடர்புள்ள சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஏனைய அமைச்சின் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.