இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும். எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும்.
குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் மக்களின் சந்திப்பான இந்தப் பொதுக் கூட்டம் “நிதர்சனம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த முதலாவது பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவாகும். மைதானத்தில் கூடியிருந்த மக்களினால் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நலன்களை நிறைவேற்றாமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இக்கட்டான காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
எப்பொழுதும் உண்மையைக் கூறி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினால் முடியுமாக இருந்தது தொடர்பில் தாம் பெருமை கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும். இக்கட்டான காலங்கள் இருந்தபோதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, புரட்சியை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மேலும், விவசாய நவீனமயமயப்படுத்தி, 10 ஆண்டுகளில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கிறோம்.
மேலும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளோம். அதன் பணிகளில் நான் தலையிடவில்லை. தவறு செய்வர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். அது எனக்கு பிரச்சினையும் இல்லை. மேலும் பாராளுமன்ற குழுக்கள் நியமிக்கப்பட்டன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவ சட்டமூலம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த தற்போதைய சட்டங்களைத் திருத்தவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப் பிரிவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவை நாட்டின் சாதாரண மக்களின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டவை என்றும் தெரிவித்தார்.