Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

காசா சிறுவர் நிதியத்துக்காக சேர்க்கப்படும் நன்கொடை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கையளிக்க இருப்பதனால் நன்கொடை செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காசாவில் இடம்பெற்றுவரும் வன்முறை காரணமாக அங்குள்ள சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்குள்ள சிறுவர்களை கருத்திற்கொண்டு காசா சிறுவர்களுக்கான நிதியம் அமைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது. எதிர்வரும் ரமழான் பண்டிகையின் போது காசா சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை இலக்காகக்கொண்டே இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் எதிர்வரும் ரமழானில் இப்தார் நிகழ்ச்சிகளை நிறுத்தி, அந்த பணத்தை இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யுமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நிதியத்திற்கு பங்களிப்பு செய்ய தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அடிப்படை தேவைகளுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுவரும் சிறுவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் டொலரை ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

எனவே இந்த நிதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி இடம்பெற இருக்கும் ரமழான் பண்டிகைக்கு கையளிக்கப்பட இருக்கிறது. 

அதனால் காசா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர் தங்களது நன்கொடைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என தெரிவித்தார்.

Share: