ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவ்வாறில்லாவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை எவராலும் தடுக்க முடியாமற் போகுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ். மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு வாக்களிக்காவிட்டால் நாடு வங்குரோத்து நிலையை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்ட அவர், 2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விட்ட தவறறை மீண்டும் விட்டு விடக் கூடாது எனவும் வலியுத்தியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மக்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாடு மோசமான நெருக்கடியிலிருந்தபோது, மிக கஷ்டமான நிலையிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டு பாதுகாத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எனவும் மக்கள் அதனை மறந்து விட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘இயலும் ஸ்ரீ லங்கா’ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு தனி ஒரு தலைவராக நின்று செயற்பட்டவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த காத்திரமான வேலைத் திட்டங்கள் அவரிடம் மட்டுமே உள்ளன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான ஒரே தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என தெரிவித்தார்.