அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்,
மன்னாரில் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர் தெரிவித்ததாவது,
“சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்லவைக்க வேண்டும். மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள சகல சமூகங்களதும் தெரிவாக சஜித் பிரேமதாச இருப்பார்.
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அயல்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவது மன்னார் மாவட்டமே. இது குறித்து, எமது வேட்பாளர் சஜித்திடம் விளக்கியுள்ளோம். அவரது ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்கும்.
இம்மாதம் (03) காலையில் வவுனியா மாவட்டத்துக்கும் மாலையில் மன்னார் மாவட்டத்துக்கும் சஜித் பிரேமதாச வரவுள்ளார். அணிதிரண்டு அவரை ஆதரிக்க வாருங்கள்.
ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. எமது மக்களின் பிரச்சினைகள் எவற்றையும் அவர் தீர்க்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தந்திரமாக இழுத்தடித்தார்.
சமூகப் பிரச்சினைகளை சில்லறைக்காசுச் சொகுசுகளால் தீர்க்கவே முடியாது. வாக்குகளில்லாத சிலர் அவரவர் வாய்ப்புகளுக்காகவே ரணிலை ஆதரிக்கின்றனர். விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை, எச்சில் ஆசைகளுக்காகப் பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்.
பரந்தும் விரிந்தும் கிடக்கும் வடமாகாண பூமியில், சுற்றுலாத் தளங்களை உருவாக்கி, வாழ்வாதரத்தைப் பலப்படுத்த சஜித் பிரேமதாசவைப் பலப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டார்.