இலங்கையில் நடத்ப்படவிருக்கும் போரா சமூகத்தின் வருடாந்த ஆன்மிக மாநாட்டை வெற்றிகரமகா நடத்துவதற்கு தேவையான முழுமையான ஆதரவை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
போரா மாநாடு தொடர்பில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணையான போரா ஆன்மீக மாநாடு ஜூலை 7- 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் இலங்கைக்கு வரவிருப்பதால், அவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.