நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் 18 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக 2,155 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 1,051 முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை 11 சட்டவிரோத தொழில் நிறுவனங்களை சோதனையிட புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் போது 65 மோசடிக்காரர்கள் விசாரணை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்கள் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நாட்களில் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளைத் தேடி செல்வது அதிகரித்து வருவதாகவும், அதேவேளை விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதான அலுவலகம் மட்டுமன்றி, ஹாலி-எல, இரத்தினபுரி, தங்காலை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாகாண அலுவலகங்களிலும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.