ஹொரணை, மீவனபலான பிரதேசத்தில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை, மீவனபலான, சிரில்டன் வத்த பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய உடகந்தகே ரமணி சகுந்தலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணும் அவரது சகோதரியும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் நுழைந்து மற்றைய பெண்ணின் கைகளையும் வாயையும் துணி நாடாக்களால் கட்டி இருக்கையில் அமர வைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் இரண்டு நபர்களும் கொலை செய்யப்பட்ட சகோதரியின் படுக்கையறைக்குச் சென்றுள்ளதுடன், சிறிது நேரம் கழித்து, சகோதரியின் அலறல் சத்தம் கேட்டதாக மற்றைய சகோதரி பொலிஸில் தெரிவித்துள்ளார்.
சத்தம் கேட்டு அறைக்கு சென்று பார்த்த போது, கட்டிலில் சகோதரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதை அவர் அவதானித்துள்ளார்.
பின்னர் பக்கத்து வீட்டுக்குச் சென்ற சகோதரி, 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.