சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.
நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது.
உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனை செய்வதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்தார்.