Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளி பகுதியில் காணாமல் போயிருந்த 12 வயது சிறுவன், கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கியிருந்த நிலையில் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் திகதி யாரிடமும் அறிவிக்காமல், வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாகவும், பின் அந்த மாணவனின் விருப்பத்தின் படி கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவனின் விருப்பத்திற்கிணங்க கடந்த 20 ஆம் திகதி ‘மதுரங்குளி சுபோதி’ எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் என கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலென்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன், கௌதம சதகம் அரன விகாரையில் இருப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், அந்த மாணவனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் எனவும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை எனவும் மதுரங்குளி சுபோதி’ எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share: