தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க இன்று(16) பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த மாநாடு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது,
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அநுர,
இலங்கையில் இதுவரை காலமும் பரம்பரை அரசியலே நடைபெற்றுள்ளது. அதற்கான முனைப்புக்களே இடம்பெறுகின்றது.
மஹிந்த ஜனாதிபதியாக இருந்தார். இப்பொழுது அவரது மகன் ஜனாதிபதியாக துடிக்கின்றார். அதுபோலதான், பிரேமதாஸவின் மகன் சஜித்தும் ஜனாதிபதியாவதற்கு கடுமையாக துடிக்கின்றார்.
அவ்வாறு பரம்பரை ஆட்சிகளால் நாங்களும், எமது நாடும் அனுபவித்ததுன்பங்கள் போதும். இனியும் அதற்கு அனுமதிக்கக்கூடாது.
இந்த பரம்பரை ஆட்சியாளர்களால் நாட்டில் யுத்தம் மட்டுமே நடந்தேறியது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இங்கு பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளீர்கள்.
உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். பல்வேறு இழப்புக்களை சந்தித்தீர்கள். ஆனால் இந்த யுத்தத்தினாலும், இழப்புக்களைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை
தெற்கிலும், வடக்கிலும் இனவாதம் பேசுகின்றனர். அந்த இனவாதத்தின் ஊடாகவே அரசியல் செய்ய முனைகின்றார்கள். ஆனால் மக்களிடம் இனவாதம் இல்லை.
எமது வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாங்கள் திருமணம், சமய வழிபாடுகள், கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட்டோம். நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்தோம். எமக்குள் இனவாதம், வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை.
கடந்த காலத்தில் பிரிவினை அரசியலே மேற்கொள்ளப்பட்டது. தென்கிலும், வடக்கிலும் அவ்வாறு பிரிவினை பேச்சுக்களை முன்னெடுத்தே அரசியல் செய்யப்பட்டது. அந்த அரசியல் நிலையிலிருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியா எனும் நாட்டை நாங்கள் பார்க்க வேண்டும். இந்திய தேசிய கொடியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனங்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.
அங்கு பல்வேறு வகையான கலை, கலாச்சாரம் என இருந்தாலும் அவர்கள் இந்தியர்களாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். அந்த ஒற்றுமையினால் அப்துல் கலாம் எனும் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவர முடிந்தது.
அந்த ஒற்றுமையால் சிறுபாண்மை இனமான சீக்கிய இனத்தவர் ஒருவரை பிரதமராகவும் கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையானது ஒட்டுமொத்த இந்தியாவிற்கு வெற்றியை கொடுத்தது.
ஆனால், எமது நாட்டில் அதற்கு மாறாக நடந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. மொழி பிரச்சினை உருவாகியதை தொடர்ந்து இனப்பிரச்சினையும் தொடங்கியது.
வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மாநாட்டில் தனிநாடு கோரி சூரியனில் தேர்தலில் போட்டியிட்டனர். தற்கொலை குண்டுதாரிகள் உருவாக்கப்பட்டனர். தொடர்ந்து 2009ல் யுத்தம் முடிந்தது.
அதன் பின்னர் 2015 மலட்டுத்தனத்தை உருவாக்கக் கூடிய அரசியல் நிலை உருவானது. தொடர்ந்து ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தி அதே அரசியல் நிலை தோற்றம் பெற்றது. நாடு நிர்க்கதியானது.
நாங்கள் சுதந்திரத்துக்கு பின்னர் சண்டையிட்டே காலம் கடந்தது. அதனால் நாங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. இழப்புக்களையும், பகைகளையும், இனரீதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் வாழ நேர்ந்தது. இவற்றுக்கு முடிவு வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் சூழல் எழுந்துள்ளது. அனைவரும் ஒன்றாகி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் பிரிவினை அரசாங்கம் எமக்கு வேண்டாம். தென்னிலங்கை மக்களுடன் இணைந்து, வடக்கு கிழக்கு மக்களும் இணைந்து அமைக்கின்ற அரசாங்கமே எமக்கு வேண்டும்.இன்று நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தது அரசியல் வியாபாரத்திற்கு அல்ல. 13க்கு மேல் தருவோம், திருத்தம் செய்வோம், சமஸ்டி தருவதாக கூறி வியாபாரம் செய்ய நாங்கள் இன்று வரவில்லை.
வாக்கு போடுங்கள் நாங்கள் இதை செய்வோம் என்று சொல்வதற்கு இது கொடுக்கல் வாங்கல் அரசியல் இல்லை. அவ்வாறான கடந்தகால அரசியல் போன்று நாங்கள் செயற்படப்போவதில்லை.ஒன்றிணைந்த அரசாங்கத்தின் மூலம் நிரந்தரமான தீர்வை முன்வைப்போம் என்பதை கூறவே நாங்கள் இன்று இங்கு வந்தோம். நாங்கள் வியாபார அரபியல் செய்பவர்கள் அல்ல.
நடு நிலையான அரசியல்வாதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச உள்ளோம். எமது அரசாங்கள் உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே பல்வேறு தீர்வுகளை நாங்கள் வழங்குவோம்.
அதில் முதலாவதாக மொழி ரீதியில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும். இந்த நாட்டில் பிறந்தத அனைத்து மக்களும் தமது மொழியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். அதனை நாங்கள் உறுதி செய்வோம். அனைத்து அலுவலகங்களிலும், திணைக்களங்களிலும் தமிழ் மொழியில் நீங்கள் சேவைகளை முன்னெடுப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
அத்துடன், உங்களின் கலச்சாரம் உறுதி செய்யப்படும். இலங்கையில் உள்ள அனைத்து மக்களிற்கும் கலை மற்றும் கலாச்சாரங்கள் தனித்தனி அம்சங்களுடன் உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டு்ம்.தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் மூலம் பிரச்சினைகள் இங்கு தோற்றுவிக்கப்படுகிறது. எமது வரலாற்றில் பல ஆண்டுகளிற்கு முன்னர் வரலாற்று அடையாளங்களாக இருந்திருக்கலாம்.
அந்த அடையாளங்களை பாதுகாக்க வேண்டும். அதற்காக நாங்கள் சண்டைபிடிக்கக் கூடாது. அது எமது எதிர்கால மக்களிற்காக பாதுகாத்து கையளிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமே. அது வரலாற்று சின்னம். அந்த சின்னங்கள் மற்றும் அடையாளங்களை பாதுகாத்துக்கொள்வதுடன், நாங்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய வழிகளை கண்டறிந்து கொள்ள வேண்டும்.
இன, மத ரீதியில் நாங்கள் முரண்பட்டுக்கொள்ளாமல் அமைதியான முறையில் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பிரச்சினையானது மக்களுக்கானது அல்ல. அரசியல்வாதிகளுக்கே பிரச்சினையாக உள்ளது.
எமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, கலாச்சார அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அமைதியான நிலை உருவாக்கப்படும். மேலும், அனைத்து இன மக்களும், பொலிஸ் மற்றும் முப்படை பரிவுகளிலும் பங்களிக்கக்கூடிய நிலை உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கு கடல் மீன்கள் இந்திய மீனவர்களால் சூறையாடப்படுகிறது. இதற்கு முன்னர் வடக்கு கடல் எல்லை தமிழர்களுடையதா அல்லது சிங்களவர்களுடையதா என போராட்டம் நடைபெற்றது. ஆனால் இன்று அக்கடல் இந்தியாவிடம் உள்ளது.
மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி எமது வளம். அது எமக்கேயான வளம். அந்த இடத்தில் நிலம் யாருக்கென உள்நாட்டு சண்டை இடம்பெற்றது. இந்து அந்த செல்வம் யாருடையது? இந்தியாவின் அதானி குடும்பத்தினருக்கானதாக மாறியுள்ளது.
அதேபோன்று, கிளிநொச்சி – பூநகரி குளதில் மாபெரும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் உருவாக்கப்படவுள்ளது. அந்த இடத்திலிருந்து ஒரு யுனிட் மின்சாரத்தை 52 ரூபாக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கம்பனி ஒன்றின் வசமாகிறது அப்பிரதேசம்.
எமது கடல், நிலம் என ஒருவருக்கொருவர் சண்டையிட்டோம். இன்று எமது வளங்களை வேறு நாடுகளும், கம்பனிகளும் தமதாக்குகின்றார்கள். எமது ஆட்சிக்காலத்தில் நிலத்தின் உரிமையை பாதுகாப்போம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல இடங்கள் அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு சொந்தமானது. வடக்கில் உள்ள கடற்கரைகளில் பல இடங்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் சென்றது. இவ்வாறான நிலைக்கு எமது ஆட்சிக்காலத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
எம்மிடம் உள்ள நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் உரிமை சாசனத்தில் திருந்தங்களை தேடி நிறைவேற்றுவோம். அதன் ஊடாக நிரந்தரமான தீர்வு முன்வைக்கப்படும்.
மிக முக்கியமாக உணவு, கல்வி உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுத்தல் எமது இலக்கில் பிரதானமான ஒன்றாகும். தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பு ஏற்றதன் பின்னர் குறுகிய நாட்களில் அனைத்து குடும்பமும் 3 வேளை உணவை உண்ணக்கூடிய நிலை ஏற்படுத்தி கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு தேவையான போசாக்கு உள்ளிட்டவை தீர்க்கப்படும் என உறுதியாக கூறிக்கொள்ள முடியும்.
ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது போன்று, 2048ல் நல்ல நிலையில் எமது நாடு உருவாகும் என நாங்களும் கூற முடியாது.
இன்று வைத்தியசாலைகளில் மருந்து இல்லை. மருந்து தேவையை தீர்க்கும் வகையில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது. அந்த நிதியை அமைச்சர் களவாடினார் அல்லவா? எமது மருந்து பொருட்களில் விசம் கலக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை பிணை இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர் மட்டுமல்ல, இவ்வாறு பணத்தை சுரண்டியவர்கள் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் சுரண்டுகின்றார்கள்
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விமானப்படை கண்காட்சிக்கு பலரும் உலங்கு வானூர்தியில் சென்றார்கள். அது முறைகேடு இல்லையா? மக்கள் உணவின்றியும், மருத்துவ வசதி இன்றியும் வாழுகின்ற நிலையில், இவ்வாறு அவர்கள் பணத்தை வீணாக செலவு செய்கின்றனர்.
ஜனாதிபதியும் நிதியை வெளிநாட்டு சுற்றுலாவிற்காக அதிக தொகையை செலவு செய்துள்ளார். இவ்வாறு நிலை தொடர்ந்தால் 48 ம் ஆண்டு வரை நாங்கள் காத்திருக்க முடியுமா?
விவசாயம் இந்த பிரதேசத்திற்கு மிகவும் முக்கியமான வளமாக உள்ளது. இந்த வளத்தினை எமது ஆட்சிக்காலத்தில் நிறைவாக பயன்படுத்த முடியும். இந்த பகுதியில் மழை பெய்தால் வெள்ளம் திரண்டு மண்ணை அள்ளி செல்கின்றது. வறட்சி காலத்தில் நிலம் பிளவுண்டு செல்கின்றது.
முறையான முகாமைத்துவத்தின் ஊடாக மண் வளத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த முடியும். தெற்கில் நெல் வாங்குவதை விட வடக்கில் மலிவாக வாங்க முடியும் என நண்பர் ஒருவர் எனக்கு கூறினார்.
அவ்வாறு, இங்குள்ள வளங்கள் நாட்டின் மிகப்பெரிய சொத்தாகின்றது. விவசாயம் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்படும், இங்குள்ள நிலங்களில் விவசாயம் மேம்படுத்துவது எமது திட்டமாக உள்ளது.
நாங்கள் ஆட்சியை பொறுப்பெடுத்த குறுகிய காலத்தில் தீர்வுக்கான பாதைகள் திறக்கப்படும். இந்த ஆட்சி மாற்றம் என்பது அரசியல் மாற்றமான முடிவாகாது. இந்த நாட்டை கட்டியெழுப்பும் ஆரம்பம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…